மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவாண், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்துத் தான் தெரிவித்த சர்ச்சை கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
#WATCH | Pune | On his statement claiming India was defeated on day one of Operation Sindoor, Congress leader Prithviraj Chavan says, “Why will I apologise? It is out of the question. The Constitution gives me the right to ask questions…” pic.twitter.com/Idnp7nL63M
— ANI (@ANI) December 17, 2025
சமீபத்தில் புனே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் முதல் நாளிலேயே இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்ததாகவும், இந்தியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் வான்படைத் தளங்கள் செயலிழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நவீனப் போர்கள் வான்வழியாகவே நடக்கும் சூழலில், எதற்காக 12 லட்சம் வீரர்களைக் கொண்ட பெரிய ராணுவத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ராணுவத்தின் வீரத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சவாண் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாரதிய ஜனதா கட்சி, இது காங்கிரஸின் ராணுவ எதிர்ப்பு மனப்பான்மையைக் காட்டுவதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசியலமைப்புச் சட்டம் தனக்குக் கேள்வி கேட்கும் உரிமையை வழங்கியுள்ளதாகவும், தவறாக எதையும் பேசாததால் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் சவாண் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
