தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் அதன் நிர்வாகிகள் குறித்து நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த அவர், விஜய்க்காக உழைத்த ரசிகர்களுக்கும், போஸ்டர் ஒட்டியவர்களுக்கும் கட்சியில் உரிய பதவிகள் வழங்கப்படவில்லை என்றும், திடீரென உள்ளே வந்த பணக்காரர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் சாடினார்.
குறிப்பாக, ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பின்னணி மற்றும் தகுதிகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், பாண்டிச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்திற்குத் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய அதிகாரம் வழங்கப்பட்டது தவறு என்று குறிப்பிட்டார். மேலும், கரூர் பிரச்சார விபத்திற்குத் திட்டமிடல் இல்லாததே காரணம் என்று குற்றம் சாட்டிய செல்வகுமார், விஜய் சரியான நபர்களைத் தனது பக்கத்தில் வைத்துக்கொள்ளாவிட்டால் வரும் தேர்தலில் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள் என்றும், தான் இனி ஒருபோதும் விஜய்யுடன் இணையப்போவதில்லை என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும் லார்டின் கிங் மார்ட்டின் சிறையில் இருந்தபோது அவரது மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் அர்ஜுனா என்றும் முதலில் திமுகவில் இணைந்து பின்னர் விசிகவில் இணைந்து அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டிய அவர் நடிகர் விஜய் நல்லவர்களுக்கு பதவி கொடுத்தால் கூட பரவாயில்லை இது போன்றவர்களுக்கு பதவி கொடுத்துள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும் பாண்டிச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்துக்கு எதற்காக தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பதவியை கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
