பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராகத் தென்னாப்பிரிக்க அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா நிர்ணயித்த 159 ரன்கள் என்ற இலக்கை, தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இந்த அசத்தல் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் அந்த அணியின் மரிசான் காப் . அதிரடியாக விளையாடிய அவர் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சிலும் இந்திய அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மரிசான் காப், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
மரிசான் காப்பின் கிரிக்கெட் பயணம் மட்டுமன்றி, அவரது காதல் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. அவர் தனது சொந்த அணியின் சக வீராங்கனையான டேன் வான் நீகெர்க்கை காதலித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் இவர்கள் இருவருமே மைதானத்தில் ஒன்றாகக் களம் இறங்கினர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒன்றாக விளையாடித் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் இவர்களும் ஒருவர். நியூசிலாந்தின் அமி சேட்டர்த்வைட் மற்றும் லீ தஹுஹு ஜோடிக்கு அடுத்தபடியாக, சர்வதேச அளவில் திருமணம் செய்து கொண்ட இரண்டாவது பெண் கிரிக்கெட் ஜோடி இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
