தெலங்கானா மாநிலத்தில் மருத்துவ உலகையே உலுக்கும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்கு வந்த 20 வயது இளம் தாயும், அவரது  குழந்தையும் உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தின் குண்டாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த 13-ஆம் தேதி மதியம் வனஜா என்ற பழங்குடியின கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு தலைமை மருத்துவர் பணியில் இல்லாததால், ஞானேஸ்வரி என்ற செவிலியர் அவசரப்பட்டு தானே பிரசவம் பார்த்துள்ளார்.

பிரசவத்திற்குப் பின் குழந்தை அசைவற்று இருந்தது. அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் 2 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. கடுமையான ரத்தப்போக்கு காரணமாகத் தாய் வனஜாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சோகத்திற்கு நடுவே, உயிரிழந்த வனஜாவின் உடல் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்து உறவினர்கள் சாம்பலைச் சேகரிக்க மயானத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த எலும்புச் சாம்பலில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கத்தரிக்கோல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்தின் போது அலட்சியமாக அந்தப் பெண்ணின் வயிற்றிலேயே கத்தரிக்கோலை வைத்து தைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், தெலங்கானா மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பணியில் இல்லாத மருத்துவர் சுதீப் மற்றும் செவிலியர் ஞானேஸ்வரி ஆகியோர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது.