குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதியதில், 44 வயதுடைய ஸ்கூட்டர் ஓட்டுநர் படுகாயமடைந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் தரப்பில் கிடைத்த தகவலின்படி, 5 சிறுவர்கள் யோகா வகுப்பில் பங்கேற்பதற்காக காரில் சென்றுவிட்டுத் திரும்பியுள்ளனர். அப்போது காரை 17 வயது சிறுவன் ஓட்டியுள்ளார். ஒரு சதுக்கத்தைக் கடக்கும்போது வேகம் அதிகமாகி, கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
Rajkot 🚨⚠️ Disturbing Visuals
Parents need to work something out⚠️
Minor Driving Hyundai Car Zig-Zag at High Speed rearended scooter & escaped…
Pedestrian, a lady escaped luckily & the motorcycle rider…@DriveSmart_IN @dabir @InfraEye pic.twitter.com/ld8R8sudx7
— Dave (Road Safety: City & Highways) (@motordave2) June 21, 2026
இந்த மோதலின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால், ஸ்கூட்டரை ஓட்டி வந்த ரமேஷ் குமார் என்பவர் காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். விபத்துக்குப் பிறகும் கார் நிறுத்தப்படாமல் அதிவேகமாகச் சென்று, சற்றுத் தொலைவில் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றுள்ளது. ரமேஷ் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், உரிமம் இல்லாமல் சிறுவனுக்குக் காரைக் கொடுத்த அவரது தந்தை மற்றும் காரின் உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
