செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதனை அரசியல் துறையிலும் பயன்படுத்தும் நோக்கத்தில், ஜப்பானில் செயல்படும் “The Path to Rebirth” என்ற கட்சி, அதிநவீன முடிவெடுக்கும் முயற்சியாக ஏ.ஐ.-யை (Artificial Intelligence) தனது புதிய தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரியில் முன்னாள் மேயரான ஷிஞ்ஜி இஷிமாரு இந்தக் கட்சியை தொடங்கியிருந்தார். 2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில் இணையவழி பிரச்சாரம் மூலம் இரண்டாவது இடத்தை பிடித்த அவர், கடந்த மேல்சபை தேர்தலில் தோல்வியடைந்ததால் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டார்.

இதனால் புதிய தலைவரை நியமிக்க வேண்டிய நிலை உருவாகி, முன்னோடியான முயற்சியாக செயற்கை நுண்ணறிவை தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகைத் தீர்மானம், ஜப்பான் அரசியலில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் கவனத்தைக் குவித்துள்ளது. ஏ.ஐ. தலைவர் கட்சியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளில் தலையிடாது, மாறாக கட்சியின் மேல்நிலை செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஏ.ஐ. எப்படி செயல்படும், எந்த வகை டெக்னாலஜி பயன்படுத்தப்படும் எனும் விவரங்கள் இறுதியாகவும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அரசியல் துறையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.