அமெரிக்காவில் தொழில்நுட்ப, மருத்துவம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற பல்வேறு நாடுகளிலிருந்து செல்கின்ற வல்லுநர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா திட்டத்தில் முக்கிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம். இதுவரை, ஒரு விண்ணப்பதாரருக்காக H-1B விசாவிற்காக $215 (ரூ.19,000) கட்டணம் மற்றும் $780 (ரூ.68,000) வரை விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியது வழக்கம். ஆனால் தற்போது, ஒரே விண்ணப்பத்துக்கு $100,000 (ரூ.88 லட்சம்) செலவாகும் என புதிய விதிமுறைகள் அமலாக்கப்படுகின்றன.
இந்த கட்டண உயர்வு காரணமாக, அமேசான், மைக்ரோசாப்ட், கூகிள், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்சிஎல், ஐபிஎம், காக்னிசன்ட் உள்ளிட்ட பல்வேறு உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் ஊழியர்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டங்களில் மாற்றம் செய்யக்கூடும்.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த அதிக கட்டணத்தை சுமக்க முடியாமல் புதிய H-1B விண்ணப்பங்களைத் தவிர்க்கும் சூழல் உருவாகும். இதனால், குறிப்பாக தொடக்க நிலை மற்றும் ஜூனியர் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்களை வெள்ளை மாளிகை ஆதரிக்கிறது. “H-1B விசா திட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. நிபுணத்துவம் இல்லாத துறைகளில் கூட வெளிநாட்டவர்களை குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்த சில நிறுவனங்கள் முறைகேடு செய்கின்றன” என நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்ததாவது, “இந்த கட்டண உயர்வு பொருளாதார சீரமைப்பின் ஒரு பகுதியாகும். இனி அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கேற்ப குறைந்த செலவில் வெளிநாட்டு ஊழியர்களை வைத்திருக்க முடியாது. அதனால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்.
இந்த மாற்றம் இந்தியர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், அதனை எதிர்கொள்வது எப்படி என்பது நாட்டு நிறுவனங்களுக்கு புதிய சவாலாக உருவாகியுள்ளது.
