2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது அந்த நாட்டு கிரிக்கெட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அணியின் மோசமான ஆட்டம் மற்றும் தலைமைப் பண்பு குறித்து முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, ஆல்-ரவுண்டர் ஷதாப் கானின் சொதப்பலான ஆட்டத்தை சாடியுள்ள முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி, அவரை அணியில் சேர்ப்பதற்கே தகுதியில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய கேப்டன் சல்மான் அலி ஆகாவின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லாததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டனைத் தேடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

​அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற விவாதத்தில் ஷதாப் கான் மற்றும் ஷாகின் அப்ரிடி பெயர்கள் அடிபட்டாலும், ஷாகித் அப்ரிடி அதிரடியான ஒரு மாற்றத்தைப் பரிந்துரைத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, அதிரடி வீரர் ஃபகார் ஜமானை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். முக்கிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வரும் பாகிஸ்தான் அணி, இனிவரும் காலங்களில் ஒரு ஆக்ரோஷமான தலைமையின் கீழ் செயல்பட்டால் மட்டுமே மீண்டெழ முடியும் என்ற கருத்து வலுவாக எழுந்துள்ளது.