இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் படையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பிசிசிஐ (BCCI) ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ (COE) மையத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சி அளிக்க, இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாகீர் கானை (Zaheer Khan) களமிறக்கியுள்ளது. பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமில், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வீரர்கள் ஜாகீர் கானின் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.
ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ட்ராய் கூலியின் பதவிக்காலம் முடிந்த பிறகு காலியாக இருந்த அந்த இடத்திற்கு, தற்போது ஜாகீர் கான் ஒரு தற்காலிகத் தீர்வாக நியமிக்கப்பட்டுள்ளார். வி.வி.எஸ். லட்சுமணின் முழு ஆதரவுடன் நடைபெறும் இந்த முகாம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பலத்தை அதிகரிக்கவும், மாற்று வீரர்களைத் தயார் செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 610 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் கொண்ட ஜாகீர் கான், ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா போன்ற வீரர்களைச் செதுக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
