பீகார் மாநிலத்தில் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு சந்தைப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆட்டோவின் பின் இருக்கையில் பல பயணிகள் அமர்ந்திருப்பதோடு, சில பயணிகள் ஓட்டுநர் இருக்கையிலும் அவனுடன் அமர்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் ஆட்டோ ஓட்டுவதைப் பற்றியோ, தங்கள் உயிர் ஒரு சிறுவனின் கையில் இருக்கிறது என்பதைப் பற்றியோ அங்குள்ள பயணிகளோ அல்லது சுற்றியிருக்கும் மக்களோ சற்றும் கவலைப்படாமல், அது ஏதோ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம் போலக் கடந்து செல்கின்றனர்.
@krohityadav_09 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது 35 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் அந்த சிறுவனின் ஓட்டும் திறனையும் அவனது தன்னம்பிக்கையையும் பாராட்டி வரும் வேளையில், பெரும்பாலானோர் இது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
View this post on Instagram
“>
“புத்தகப் பையைச் சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், ஒரு குழந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்ல, மாறாக வெட்கக்கேடானது” என்று பல பயனர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், எந்த ஒரு நிர்ப்பந்தம் இந்த சிறுவனை இவ்வளவு சிறிய வயதில் ஆட்டோ ஓட்ட வைத்தது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
