உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே, திடீரென அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பாம்புகள் வெளியே வரத் தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டின் உள்ளே இத்தனை பாம்புகள் உலாவுவதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, மீட்புப் பணியாளர் சூரஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்புகளைப் பிடிக்கும் பணியைத் தொடங்கினார்.

அவர் மீட்புப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வீட்டிலிருந்து ஒவ்வொன்றாக சுமார் 35 குட்டிப் பாம்புகளைப் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்து, பின்னர் அவற்றை பாதுகாப்பாக அருகில் உள்ள காட்டில் கொண்டு சென்று விட்டார்.

இந்த விசித்திரமான சம்பவத்தைக் காண்பதற்குப் ஏராளமான கிராம மக்களும் அங்கு திரண்டனர். மற்றொரு சம்பவம், மும்பையின் பாந்த்ரா வெஸ்ட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கேலக்ஸி அபார்ட்மெண்டில் நடந்துள்ளது.

திங்கள்கிழமை மாலை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காவலர் மனோஜ் கட்டே என்பவரின் கண்ணில் 5 அடி நீளமுள்ள ஒரு பாம்பு தென்பட்டது. அவர் உடனடியாக உள்ளூர் பாம்பு பிடிக்கும் வீரரான விக்கி துபே என்பவருக்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கி துபே, கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கார் பார்க்கிங் பகுதியின் ஷட்டர் ஒன்றிற்குள் மறைந்திருந்த அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டார். சோதனையில், அது சாரைப்பாம்பு வகையைச் சேர்ந்த விஷமற்ற பாம்பு என்பது தெரியவந்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மீட்புப் பணியாளர்கள், பாம்புகளைக் கண்டால் பொதுமக்கள் தாங்களாகவே பிடிக்க முயலாமல் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.