திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், திமுக அமைச்சர்களுக்கும் இடையே புகைச்சல் இப்போது பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “காங்கிரஸில் ஒரு சிலர் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள்” என்று காரசாரமாகப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, “கூட்டணியில் வேறு வழி இல்லாமல் இருப்பதால்தான் செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து போஸ் கொடுக்கிறேன்” என்று அவர் நக்கலாகச் சொன்னது காங்கிரஸாரை செம்ம கடுப்பாக்கியுள்ளது. ஏற்கனவே மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோரின் பேச்சால் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு இருந்த நிலையில், ராஜகண்ணப்பனின் இந்த பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

​மறுபக்கம், தேர்தல் நெருங்கும் வேளையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக இன்னும் குழு அமைக்காமல் காலம் தாழ்த்துவது காங்கிரஸ் தரப்பிற்குப் பெரிய தலைவலியைத் தந்து வருகிறது. தங்களை திமுக கண்டுகொள்வதே இல்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம், அமைச்சர்களின் இப்படிப்பட்ட “நோஸ் கட்” பேச்சுகள் மறுபுறம் என காங்கிரஸ் கட்சி இப்போது தர்மசங்கடத்தில் தவிக்கிறது. இந்த மோதல் வலுத்தால் வரும் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? அல்லது “பிரிவோம் சந்திப்போம்” என முடிவெடுப்பார்களா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் சுடச்சுட விவாதிக்கப்பட்டு வருகிறது.