உத்தரப்பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுரில் உள்ள ரத்தௌரா கிராமத்தில், பள்ளி மாணவர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலையைக் கடக்க ஏணியைப் பயன்படுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், புத்தகப் பைகளைச் சுமந்து கொண்டு இடுப்பளவு தேங்கியுள்ள தண்ணீருக்கு மேலே போடப்பட்டுள்ள ஒரு குறுகிய ஏணியின் மீது ஆபத்தான முறையில் சமநிலைப்படுத்தி நடந்து செல்கின்றனர்.

“>

இந்நிலையில் பல கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், அடிப்படை உள்கட்டமைப்பான சாலை வசதிகள் கவனிக்கப்படாமல் இருப்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அரசின் அலட்சியப் போக்கு குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த “வளர்ந்த பாரதம்” என்று விளம்பரப்படுத்தப்படும் நிலையில், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய சூழல் நிலவுவது வேதனையளிப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முறையான வடிகால் மற்றும் சாலை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.