சலூன்களுக்குச் சென்று தலைக்கு மசாஜ் செய்துகொள்வது பலரது வழக்கமாக உள்ள நிலையில், அங்கு செய்யப்படும் சிறு தவறு எவ்வாறு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்த்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைலேஷ் வர்மா என்ற பயனர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், நபர் ஒருவர் சலூனில் அமர்ந்து தலை மசாஜ் செய்துகொண்டிருக்கிறார்.
அப்போது மசாஜ் செய்த ஊழியர், அவரது கழுத்துப் பகுதியில் திடீரென அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக கழுத்து நரம்பு நசுங்கியதால், அந்த வாலிபர் அடுத்த நொடியே மயக்கமடைந்து நாற்காலியிலேயே சுருண்டு விழுந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த சக வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்து உறைந்து நின்றனர்.
⚠️
किसी भी शैलून पर मालिश या चंपी करवाते वक्त हमेशा सावधानी बरतना चाहिएएक व्यक्ति शलून में बैठकर चंपी करवा रहा था अचानक पता नहीं कौन सी नश दब गई कि चंपी वाला आदमी बेहोश हो गया l pic.twitter.com/wTq332oFK6
— Shailesh Verma (@shaileshvermasp) June 17, 2026
ஜூன் 17 அன்று இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் இல்லை என்றாலும், இது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ரீதியாக இதனை ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் சிண்ட்ரோம்’ என்று பயனர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
கழுத்தை முறையற்ற வகையில் திருப்புவதாலோ அல்லது அதிக அழுத்தம் கொடுப்பதாலோ, மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, தலைச்சுற்றல், கண் இருளுதல் அல்லது திடீர் பக்கவாதம் போன்ற மயக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர். “சலூன்களில் கழுத்தை ஆபத்தான முறையில் திருப்புவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்” என்றும், “எந்த நரம்பு எப்போது அமுங்கும் எனத் தெரியாது என்பதால் சலூன்களில் மசாஜ் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
