பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ் (PES University) பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மாணவரை வகுப்புக்குள்ளேயே மத ரீதியாக இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரளிதர் தேஷ்பாண்டே என்ற அந்த பேராசிரியர், வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையின மாணவரை நோக்கி, “வெட்கமே இல்லையா? உன்னைத் தீவிரவாதி என்றுதான் அழைப்பேன்” என்று சுமார் 13 முறை ஆவேசமாகக் கத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரை இழுத்து, “ட்ரம்ப் உன்னைத் தூக்கிச் செல்வார்” என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்த மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது காட்டுத்தீயாகப் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்கிய பேராசிரியரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் அந்தப் பேராசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜவஹர் கூறுகையில், “எங்கள் நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் தரப்பில் புகாரளிக்கச் சொன்ன போதிலும், பல்கலைக்கழகம் தற்போது வரை துறை ரீதியான விசாரணையை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.