மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள வெர்சோவாவில், பொறாமை மற்றும் சந்தேகத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் அதிர வைத்துள்ளது. 20 வயது மாணவி ஒருவரின் கூந்தல் அழகாக இருப்பதாக, அவரது தோழியின் காதலன் இன்ஸ்டாகிராமில் வர்ணித்துப் பேசியதே இந்த வன்முறைக்குக் காரணமாகியுள்ளது.

கடந்த மார்ச் 25-ம் தேதி நள்ளிரவு, ஐஸ்கிரீம் டெலிவரி என நினைத்து கதவைத் திறந்த அந்த மாணவியை, அவரது தோழி மற்றும் இருவர் சேர்ந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்துள்ளனர். “உனக்கு முடி தானே முக்கியம்?” எனக் கத்திக் கொண்டே, கத்திரிக்கோலால் அந்த மாணவியின் கூந்தலை வெட்டி எறிந்துள்ளனர்.

இந்த கொடூரச் செயலை மற்ற இரு தோழிகள் வீடியோவாக எடுத்து மிரட்டியது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், வெர்சோவா போலீசார் லைபா மற்றும் அவரது தோழிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆரம்பத்தில் அந்த மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது எந்தத் தப்பான உரையாடலும் இல்லை என்பது தெரிந்தும், காதலன் வர்ணித்த ஒரே காரணத்திற்காக இந்தப் பழிவாங்கல் நடந்துள்ளது.

அதேசமயம், சம்பந்தப்பட்ட பெண்கள் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், இது வைரல் ஆவதற்காக செய்யப்பட்ட ஒரு ‘ஸ்டண்ட்’ தானா அல்லது உண்மையான வன்முறையா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறு சந்தேகத்திற்காகத் தோழியின் மானத்தோடு விளையாடிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.