இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்துகளின் விலை மலிவானது என்பதை விளக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஈனஸ் ஃபரியா (Ines Faria), உலகம் முழுவதும் பயணம் செய்து வருபவர். தற்போது கேரளாவின் மன்றோ தீவில் (Munroe Island) தங்கியிருந்தபோது, அவருக்குக் கடுமையான இருமல் ஏற்பட்டுள்ளது.

இதற்காக அங்குள்ள ஒரு மருந்துக் கடைக்குச் சென்ற அவர், ஒரு பாட்டில் இருமல் சிரப் மற்றும் மூன்று பேக் தொண்டை வலி மாத்திரைகளை வாங்கியுள்ளார்.

இந்த மருந்துகள் அனைத்தும் சேர்த்து பெரிய அளவில் பில் வரும் என அவர் எதிர்பார்த்த நிலையில், மருந்துக் கடைக்காரர் வெறும் 252 ரூபாய் மட்டுமே என்று சொல்ல, ஈனஸ் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் இந்த மருந்துகளுக்கு பல மடங்கு அதிகமாகச் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “வெறும் 2 யூரோக்களுக்கு இவ்வளவு மருந்துகளா? நான் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று நினைக்கிறேன்” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியப்புடன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த இந்திய நெட்டிசன்கள், “நீங்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் இதுவே இலவசமாகக் கிடைத்திருக்கும்” என்றும், “இஞ்சி, மிளகு கலந்த தேன் தான் இந்தியாவின் சிறந்த மருந்து” என்றும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.