உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுதம் மற்றும் ராணுவ உதவியை வழங்கி வருகின்றது. அதே சமயம் அந்நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தாலும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அந்த சமயத்தில் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் சீனா அவ்வாறு செய்தால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்களை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது உக்ரைன் போரில் சீனா ரஷ்யா பக்கம் சாய்ந்தால் உங்களுக்கு கவலை அளிக்குமா? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அமெரிக்க அதிபர் கூறியதாவது “இந்தப் போரில் ரஷ்யாவின் பக்கம் சீனா சாய்வதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.