ஈரோட்டில் விஜய் பங்கேற்ற பரப்புரைப் பயணம் ஒருபுறம் உற்சாகமாகத் தொடங்கினாலும், அவருக்கு எதிராக மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “ஈரோடு வரை வந்த உங்களால், பக்கத்தில் இருக்கும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க முடியவில்லையா?” என்ற கேள்வி அந்த போஸ்டர்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.
மேலும், “மக்களுக்கு ஆறுதல் சொல்ல நேரமில்லை, ஆனால் சினிமா ஆடியோ லாஞ்சிற்காக மலேசியா செல்ல நேரமிருக்கிறதா? What Bro, It’s Very Wrong Bro” என நக்கலான ஆங்கில வாசகங்களுடன் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ‘விஜய் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், அவர் எங்கெல்லாம் முன்னிலையில் இருக்கிறார் (Present), எவற்றைத் தவிர்க்கிறார் (Absent) என்ற ஒப்பீடு வைரலாகி வருகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் டப்பிங் பணிகள், மலேசியாவில் நடைபெறும் பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகளில் விஜய் ‘பிரசன்ட்’ ஆகிறார் என்றும்; அதே சமயம் மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பது மற்றும் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்துவது போன்ற முக்கியமான அரசியல் பணிகளில் அவர் ‘ஆப்சென்ட்’ ஆகிவிடுகிறார் என்றும் அந்த போஸ்டர்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்த போஸ்டர் யுத்தம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
