ஈரானின் எரிவாயு கிடங்கு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ (South Pars) எரிவாயு கிடங்கு மீது இஸ்ரேல் சமீபத்தில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் குறித்து சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப்,

“ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எங்களுக்கு எவ்வித முன்கூட்டிய தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல், இதில் கத்தார் நாட்டிற்கும் எந்தப் பங்கும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி (LPG) ஆலை மீது ஈரான் இன்று காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். “ஈரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு கிடங்கு முழுவதையும் அமெரிக்கா அடியோடு அழிக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்தத் தொடர் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.