அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளன.

ஏற்கனவே அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சத் திட்டத்தை நிராகரித்த ஈரான், தற்போது தனது 5 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே போரை நிறுத்தத் தயார் என்று அறிவித்துள்ளது.

ஈரானின் நிபந்தனைகளில் முக்கியமாக, தற்போதைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவோ இஸ்ரேலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்று உறுதியளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது தனக்கு முழுமையான கட்டுப்பாடு வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இதற்கான ராஜதந்திர முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இந்த நிபந்தனைகளை ஏற்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.