பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி ரகசியங்கள் குறித்து அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் தற்போது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியரும், வான்வழி பாதுகாப்பு விவகார நிபுணருமான ராபர்ட் பேப் (Robert Pape) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த அதிர்ச்சி தகவலை உடைத்துள்ளார்.

அதன்படி, கடந்த 1990 முதல் 2000-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், யுரேனியம் செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்படும் 600 முதல் 900 சென்ட்ரிபியூஜ் (Centrifuge) கருவிகளை ஈரான் நாட்டிற்கு பாகிஸ்தான் ரகசியமாக வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக 90 சதவீதத்திற்கும் மேலாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு அணு ஆயுதங்களை உருவாக்க முடியும். தற்போது ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட சுமார் 450 கிலோ யுரேனியம் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

இதுவே உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பாகிஸ்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டிலேயே ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் ஆயிரக்கணக்கான ஏஜென்ட்டுகளை அனுப்பி கண்காணிக்க முயன்றன. இருப்பினும் ஈரானின் இந்த முயற்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ராபர்ட் பேப் கூறியுள்ளார்.

அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ், ஈராக் மீது காட்டிய தீவிரத்தை ஈரான் மீது காட்டியிருந்தால் மத்திய கிழக்கு ஆசியாவின் நிலைமையே இன்று மாறியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீதான போருக்குத் துடிக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதீத ஆர்வம் அவருக்குப் பின்னடைவாக மாறலாம் என்றும், இதனால் அவர் தனது பதவியை இழக்க நேரிடும் என்றும் பேராசிரியர் ராபர்ட் பேப் எச்சரித்துள்ளார்.