அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல முயன்ற அமெரிக்கப் போர் விமானங்கள், இத்தாலியின் சிசிலி (Sicily) தளத்தில் தரையிறங்க அனுமதி கோரின. ஆனால், மெலோனி அரசு இந்த கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராகவும், டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தும், இத்தாலி எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் மெலோனியின் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்தால், அது இத்தாலியின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக இந்த அதிரடி முடிவை மெலோனி எடுத்துள்ளார்.

ஏற்கனவே ஸ்பெயின் நாடு அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ள நிலையில், இப்போது இத்தாலியும் கைகொடுக்க மறுத்துள்ளது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.