மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கியமான ராணுவ மையமான இஸ்ஃபஹான் நகர் மீது அமெரிக்கா தனது அதிபயங்கர 2,000 பவுண்ட் (சுமார் 900 கிலோ) எடை கொண்ட ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

நிலத்தடி அறைகளையும், கான்கிரீட் கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று வெடிக்கக் கூடிய இந்த ராட்சத குண்டுகள், ஈரானின் மிகப்பெரிய ஆயுதக் கிடங்குகளைக் குறிவைத்து வீசப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்ஃபஹான் நகரில் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை உற்பத்தி மையங்கள் அமைந்துள்ளதால், இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவ பலத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே இஸ்ரேல் – ஈரான் போரால் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் இந்த நேரடித் தாக்குதல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒருவேளை ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து உலகப் பொருளாதாரமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.