ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த உமர் இக்பால் என்ற வ்லாகர், தனது பயணத்திற்காக பிப்ரவரி இறுதியில் ஈரான் சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற சில நாட்களிலேயே போர் தீவிரமடைந்ததால், சுமார் 12 நாட்கள் மரண பயத்துடன் அங்கு கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சுற்றிலும் ஏவுகணைகள் விழுந்து கொண்டிருந்தன. இனி உயிர் பிழைக்க மாட்டோம் என்று கருதி எனது கடைசி நிமிடங்களுக்காக கல்மா ஓதத் தொடங்கினேன்.
ஆனால், நான் ஒரு இந்தியன் என்பதால் ஈரானிய பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் எனக்குப் பெரும் உதவிகளைச் செய்தனர். இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தினாலேயே நான் இன்று உயிருடன் இருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 2-ம் தேதி நடந்த ஒரு பெரிய தாக்குதலில் சிக்கி லேசான காயமடைந்த அவர், பின்னர் சுமார் 750 கிலோமீட்டர் பயணம் செய்து ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக தப்பி வந்துள்ளார்.
ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், போர்க்களத்தில் தனக்கு உதவிய இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் உமர் இக்பால் கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ தொகுப்பு தற்போது இணையத்தில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.
