கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இன்று காலை ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தும் விபத்து நடந்துள்ளது. பெல்தங்கடி தாலுகாவில் உள்ள கலியா கிராமம் அருகே, அரசுப் பேருந்தில் (KSRTC) பயணம் செய்த இரண்டு மாணவிகள் ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு மாணவிகளும் அக்கா, தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் தங்களது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதற்காக புத்தூர் பகுதியிலிருந்து தர்மஸ்தலா நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியுள்ளனர்.

அந்தப் பேருந்தில் சுமார் 86 பயணிகள் இருந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருக்கை கிடைக்காமல் அந்த மாணவிகள் இருவரும் கதவு அருகே நின்று பயணம் செய்துள்ளனர்.

பேருந்து ஒரு வளைவில் திரும்பியபோது, எதிர்பாராத விதமாகப் பேருந்தின் கதவு திடீரெனத் தானாகத் திறந்து கொண்டது. இதில் நிலைதடுமாறிய அக்கா முதலில் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவரைப் பிடிக்க முயன்ற தங்கையும் நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்தார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படுகாயமடைந்த இரண்டு மாணவிகளும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசுப் பேருந்தின் கதவு சரியாகப் பூட்டப்படாமல் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.