இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனம் எட்டியுள்ளது. அராபிய கடலில் அமைந்துள்ள ‘தாமன் அப்சைட் டெவலப்மென்ட்’ (Daman Upside Development Project) திட்டத்தின் மூலம் எரிவாயு உற்பத்தியை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
மார்ச் 29-ஆம் தேதி முதல் வணிக ரீதியான எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர் மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நேரத்தில் இந்தியாவின் இந்த உள்நாட்டு உற்பத்தித் தொடக்கம் ஒரு ‘மாஸ்டர் ஸ்டிரோக்’ ஆகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வது கணிசமாகக் குறையும் என்பதால், இந்தியா எரிசக்தி துறையில் சுயசார்பு அடைவதை நோக்கி ஒரு பெரிய அடி எடுத்து வைத்துள்ளது. இந்தச் செய்தி இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
