அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் குழப்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு தரப்பினர் ஆளுங்கட்சியான த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த இரட்டைத் தலைமை மோதல்களால் கட்சியில் மீண்டும் பெரும் குழப்பம் வெடித்துள்ள நிலையில்தான், செம்மலையின் இந்த விலகல் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் காப்பற்றப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம் இன்று பலவீனமடைந்து வருவதைக் கண்டு பெரும் வேதனை அடைவதாகக் குறிப்பிட்டார். கட்சியின் வளர்ச்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய தலைவர்களிடமும் நிர்வாகிகளிடமும் சுத்தமாக இல்லை என்று சாடிய அவர், தலைவர்களிடையே நிலவும் ‘ஈகோ’ தான் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தனக்கு கட்சியில் பல வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்பட்ட போதிலும், தலைமைக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்ததாக அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
தனது விலகலுக்குப் பிறகாவது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி, ஈகோக்களைக் கைவிட்டு கட்சியை ஒற்றுமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தனக்கு தற்போது வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்திய செம்மலை, தனது அடுத்தகட்ட அரசியல் எதிர்காலத்தைக் காலம்தான் தீர்மானிக்கும். அதிமுகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை ஒரு வலுவான இயக்கமாக காட்ட தவறியதே அதற்கு காரணம். இதில் விஜய்யோ அல்லது பிறரையோ குறை சொல்ல முடியாது என வேதனையுடன் கூறி விடைபெற்றார்.
