தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்மைய தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்து தொண்டர்களிடையே விரிவாகப் பேசினார்.
அவர் பேசுகையில், “ஏதோ இன்றைக்கு நடைபெற்று முடிந்து இருக்கக்கூடிய தேர்தலிலே நாம் தோற்றுவிட்டது மாதிரி, படுதோல்வி அடைந்துவிட்டது மாதிரி கவிதை பாட சிலர் முன்வந்திருக்கிறார்கள். 1949-ல் தொடங்கப்பட்ட நம்முடைய கழகம் 1952, 1957, 1962, 1967, 1971 எனத் தொடர்ந்து நடைபெற்ற எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கிறது. பல வெற்றிகளையும், பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே இன்னும் வலிமையாக மீண்டு வரும்” என்றார்.
தொடர்ந்து மாற்றுக் கட்சியின் தேர்தல் வியூகம் குறித்துப் பேசிய அவர், “எந்தப் பணியும் செய்யாமல், மக்களைச் சந்திக்காமல், பாக முகவர்களையோ (பூத் ஏஜென்ட்), ஏன் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை முகவர்களைக் (கவுண்டிங் ஏஜென்ட்) கூட நியமிக்காதவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதில் என்ன ரகசியம் இருக்கிறது என்றால், அதுதான் சோசியல் மீடியா.
முக்கியமாக இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, சிறு பிள்ளைகளையும், குழந்தைகளையும் பிரச்சாரம் செய்ய வைத்துள்ளனர். அந்தக் குழந்தைகள் மூலமாக அவர்களின் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த வியூகம் நம்முடைய கணக்குக்குத் தெரியாமல் போய்விட்டது” என்று ஓப்பனாக ஒப்புக்கொண்டார்.
மேலும் தொண்டர்களுக்கு தைரியம் ஊட்டும் வகையில் பேசிய அவர், “இனிமேல் நாம் உஷாராக இருந்து, சமூக வலைதளங்களின் இந்த வியூகத்தையும் முறியடிக்கும் வகையில் நமது பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே, தொண்டர்களாகிய நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குப் பின்னால் நம்முடைய கழகம் இருக்கிறது, இயக்கம் இருக்கிறது, நாங்கள் இருக்கிறோம். மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் நிறைவேற்றிய திட்டப் பணிகள் போதாது, இன்னும் பல மக்கள் நலப் பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இன்னும் ஐந்து ஆண்டு காலம் நமக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் பல திட்டங்கள் வந்திருக்கும், அது இப்போது தடைபட்டுப் போயிருக்கிறது. அது குறித்துதான் எனக்குக் கவலை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட, மக்களுக்காகப் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் உறுதியோடு முன்னெடுத்து நம்முடைய கடமையை ஆற்றுவோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
