தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது மற்றும் வாக்கு வங்கி மாற்றம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பரபரப்பான பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவிய அரசியல் சூழல் குறித்துப் பேசிய திருமாவளவன், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்றதை அடுத்து, ஆட்சி அமைக்க இடதுசாரிகளும், விசிகவும் ஆதரவு அளிப்பது என முடிவெடுத்து ஆதரவுக் கடிதம் கொடுத்தோம்.
நாங்கள் ஆதரவுக் கடிதம் கொடுத்த பிறகும் எனக்கு ஒரு முக்கியத் தகவல் வந்தது. அதாவது, என்னை முதலமைச்சராக்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு அதிமுக தரப்பில் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், இதற்கு நான் சம்மதித்தால் திமுக வெளியில் இருந்து ஆதரவு தரத் தயாராக இருப்பதாகச் சொல்லப்பட்டதாகவும் அந்தத் தகவல் தெரிவித்தது.
இதை நான் முதலில் ஒரு ‘ஃபன்’ (விளையாட்டாக) ஆகத்தான் எடுத்துக் கொண்டேன். ஆனால், அரசியல் களத்தில் இதற்கான நகர்வுகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று எனக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள். எனினும், நாங்கள் அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க-வுக்கான எங்கள் ஆதரவை முறைப்படி அறிவித்துவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.
தேர்தல் களம் குறித்து மேலும் பேசிய அவர், “பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்பதுதான் எங்களின் முதன்மையான பிரச்சாரமாக இருந்தது. திமுக எதிர்ப்பு வாக்குகள் சீமானின் நாம் தமிழர் கட்சி, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்குப் பிரிந்து சென்றன. அதேநேரம், பாஜகவுக்கு எதிராக நாங்கள் செய்த பிரச்சாரம், த.வெ.க-வுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்த வாக்காளர்கள் எளிதாக த.வெ.க-வை நோக்கி நகர்ந்துவிட்டனர் என்றார்.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கி த.வெ.க-வுக்கு மாறியது குறித்து திருமாவளவன் விரிவாக விளக்கமளித்தார். “சினிமாவில் ‘விஜய்’ என்று அறியப்பட்டவர், அரசியலில் ‘ஜோசப் விஜய்’ என்று பிராண்டிங் செய்யப்பட்டதால், பெரும்பாலான கிறிஸ்தவ வாக்குகள் த.வெ.க பக்கமே சென்றுவிட்டன. குறிப்பாக, சுமார் 80 சதவீத கிறிஸ்தவ வாக்குகள் த.வெ.க-வுக்கு ஆதரவாக விழுந்துள்ளன. அதேபோல், முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரை 60 முதல் 70 சதவீத வாக்குகள் மட்டுமே திமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ளன. அங்கும் பெரிய அளவில் வாக்குச் சேதாரம் ஏற்பட்டுள்ளது.
எங்களின் வெற்றிக்கு எப்போதும் சிறுபான்மையினர் வாக்குகளே முக்கியப் பலமாக இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள் பெருமளவில் த.வெ.க-வுக்கு மாறியிருப்பது எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமன்றி, அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் முக்கிய வாக்குகளும் த.வெ.க-வுக்குச் சென்றுள்ளன” என்று தொல். திருமாவளவன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
