வேலை அழுத்தம் காரணமாக இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக (LGBT) மாறுவதாக மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத் தொடரில் அந்நாட்டு அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு பணியிடங்களில் ஏற்படும் அதீத வேலை அழுத்தமும் (Work Pressure), சமூகத்தில் நிலவும் பல்வேறு சூழல்களின் தாக்கமுமே அவர்கள் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட எல்.ஜி.பி.டி. (LGBT) சார்ந்த மனநிலைக்குத் தள்ளப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன” என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமின்றி, தவறான தகவலை அமைச்சர் பொதுவெளியில் பகிர்ந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “பாலின ஈர்ப்பு என்பது ஒருவரின் பிறப்பு மற்றும் உணர்வு சார்ந்தது; அதற்கும் வேலை அழுத்தத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனப் பதிவிட்டு அமைச்சரின் கருத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் இந்த பேச்சு அந்நாட்டு அரசியலில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.