காதலை ஒரு உணர்வாகப் பார்க்காமல், கனவு இல்லத்தை வாங்குவதற்கான முதலீடாக மாற்றி உலகையே அதிர வைத்துள்ளார் சீனாவின் ‘சியாவோலி’ (Xiaoli) என்ற பெண். 20 காதலர்களிடம் 20 ஐபோன்களைப் பெற்று, அதை விற்று அவர் வீடு வாங்கியுள்ள தகவல் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சீனாவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த சியாவோலி என்ற இளம்பெண், ஒரே நேரத்தில் 20 இளைஞர்களுடன் டேட்டிங் செய்துள்ளார். தனது 20 காதலர்களிடமும் ஆசை வார்த்தை பேசி, அப்போதைய சந்தையில் புதிய வரவான ‘ஐபோன் 7’ (iPhone 7) மாடலைப் பரிசாகக் கேட்டுள்ளார். வியப்பளிக்கும் விதமாக அந்த 20 காதலர்களும் அவருக்கு ஐபோனைப் பரிசளித்துள்ளனர்.
னக்குக் கிடைத்த 20 ஐபோன்களையும் பயன்படுத்தாமல், உடனடியாக அவற்றை ஒரு செல்போன் மறுசுழற்சி நிறுவனத்திடம் விற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு 1,20,000 சீன யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ₹15 லட்சம்) கிடைத்துள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு, தான் நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஒரு ஆடம்பர வீட்டின் முன்பணத்தைச் செலுத்தி, அந்த வீட்டைச் சொந்தமாக்கியுள்ளார்.
தனது புதுமனை புகுவிழாவிற்குத் தோழிகளை அழைத்து வீட்டைச் சுற்றிக் காட்டிய சியாவோலி, அந்த வீடு வாங்கிய ரகசியத்தைச் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தோழிகளில் ஒருவர், சமூக வலைதளத்தில் இதைப் பதிவிட, அது உலகளாவிய விவாதமாக மாறியது.
இந்தச் சம்பவம் குறித்து சீனாவின் ‘வெய்போ’ தளத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. “இவ்வளவு பெரிய பணவீக்க காலத்தில், தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வீடு வாங்கியுள்ளார்” என ஒரு தரப்பினர் பாராட்டினாலும், “காதல் என்ற பெயரில் 20 பேரின் உணர்வுகளோடு விளையாடியது மிகப்பெரிய அஏமாற்று வேலை” என மனித உரிமை ஆர்வலர்கள் சாடி வருகின்றனர். எது எப்படியோ, சியாவோலியின் இந்த ‘ஐபோன் உத்தி’ இன்றும் இணையத்தில் பேசுபொருளாகவே உள்ளது.
