ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 9 மாதக் குழந்தை மீது, ஒரு நபர் வேண்டுமென்றே ஃபிளாஸ்கில் இருந்த கொதிக்கும் காபியை ஊற்றிவிட்டுத் தப்பியோடினார்.

இதில் அந்தக் குழந்தைக்கு முகம் மற்றும் கை, கால்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு, பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்தச் செயலைச் செய்த 33 வயது நபர், போலீஸார் அடையாளம் காண்பதற்கு முன்பே ஆஸ்திரேலியாவை விட்டு சீனாவுக்குத் தப்பிச் சென்றார். ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கைதிகளைக் கைமாற்றும் ஒப்பந்தம் இல்லாததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் இருந்தது.

இந்த நிலையில், சீனா இப்போது இந்தப் பிரச்சினையில் தலையிட்டுள்ளது. சீனத் தூதர் சியாவ் கியான் இது குறித்துப் பேசுகையில், “நாங்கள் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக சீனாவின் ஒரு சிறப்புக் காவல் குழு ஆஸ்திரேலியாவிற்கு வந்து, அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து விசாரணையை மேற்கொள்ள உள்ளது.

சீனச் சட்டப்படி, அந்த நாட்டுப் பிரஜை வெளிநாட்டில் குற்றம் செய்தாலும் சீனாவிலேயே தண்டனை வழங்க முடியும் என்பதால், அந்த நபர் விரைவில் பிடிபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தங்கள் மகனின் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.