தமிழக அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினிகளில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. லேப்டாப் வாங்கிய கையோடு தின்னர் போன்ற திரவங்களைப் பயன்படுத்தி இந்தப் படங்களை நீக்கிவிட்டு தங்களுக்குப் பிடித்தமானவர்களின் ஸ்டிக்கர்களை ஒட்டும் செயலில் சில மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், எல்காட் நிறுவனம் இதற்கு அதிரடியான ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. மாணவர்கள் லேப்டாப்பில் உள்ள அரசு முத்திரையையோ அல்லது முதலமைச்சரின் புகைப்படத்தையோ நீக்கினால், அந்த மடிக்கணினிக்கு வழங்கப்பட்டுள்ள ஓராண்டு வாரண்டி ரத்தாகிவிடும் என்று எல்காட் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் மடிக்கணினியின் மேல் பகுதியில் உள்ள புகைப்படமும் அதன் வரிசை எண்ணும் சிதையாமல் இருந்தால் மட்டுமே பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும், இல்லையெனில் அரசின் இலவச வாரண்டி சலுகையைப் பெற முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தச் செயல், லேப்டாப்பில் உள்ள படங்களை அழிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஒரு மறைமுகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.