கோவா மாநிலம், பாண்டா பகுதியில் உள்ள தாக்  ராஜ்துர்கா ஹெரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த ஜெயந்த் ஜோஷி (67) என்ற முதியவர், டிசம்பர் 7-ஆம் தேதி இரவு சுமார் 10.34 மணியளவில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

மார்கோவைச் சேர்ந்த இவர், கடந்த ஆறு மாதங்களாகத் தனது சகோதரியின் குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். மனநல சிகிச்சை பெற்றுவந்த இவர், விழுந்து பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனையில், முதுகெலும்பு, மார்பு, வயிறு மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  போலீஸார், இது தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம்  என வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.