உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் கன்டோன்மென்ட் பகுதியில் மனிதநேயமற்ற முறையில், தனது மனைவியை வெறும் 2 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளுக்காக நான்கு பேரிடம் கணவன் விற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் கல்யாண்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், ஒரு நபருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த வாழ்க்கையில், கடந்த 2025 செப்டம்பர் முதல் புயல் வீசத் தொடங்கியது. 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ‘பல்சர்’ பைக் கேட்டு அந்தப் பெண்ணைத் கணவன் துன்புறுத்தத் தொடங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கணவர் அடிக்கடி அடையாளம் தெரியாத நபர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்துவார் என்றும், அவர்களுடன் உடலுறவு கொள்ளும்படி தன்னை வற்புறுத்துவார் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்தால், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துவிடுவேன் என கணவன் மிரட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று இரவு, அந்த நபர் தனது நான்கு நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மனைவியைச் சுட்டிக்காட்டி, “இவளை உங்களிடம் விற்றுவிட்டேன், இனி இவள் உங்களுடன் தான் இருக்க வேண்டும்” என்று கூறி அதிர வைத்துள்ளார். இதற்கு அந்தப் பெண் உடன்படாததால், ஒரு நாள் முழுவதும் ஒரு அறையில் அடைத்து வைத்து, உணவு மற்றும் தண்ணீர் இன்றி அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.
எப்படியோ தப்பித்து தனது சகோதரருக்குத் தகவல் கொடுத்த அந்தப் பெண்ணை மீட்கச் சென்ற சகோதரரையும் கணவன் விரட்டியடித்துள்ளார். இறுதியாக, 112 அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் தற்போது கணவன் மீது வரதட்சணை கொடுமை, மனிதக் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
