இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளி, மகாராஷ்டிராவில் உள்ள ஜம்கேட் பகுதியில் அமைந்துள்ள தாங்கர் வாஸ்தி ஜில்லா பரிஷத் பள்ளியின் அற்புதமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. சமூக ஆர்வலரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான சித்தேஷ் லோகரே, மாநிலம் முழுவதும் ஸ்கூட்டியில் பயணித்து, மோசமான நிலையில் உள்ள 30 பள்ளிகளை ஆவணப்படுத்தி, 3 கோடி ரூபாய் நிதி திரட்டி, 30,000 குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஜம்கேட் பள்ளியில், சுவர்கள் கற்றலை ஊக்குவிக்கும் ஓவியங்களாலும், கதவுகள் ராக்கெட் வடிவத்திலும், மனித பரிணாமம், உயிரியல் கருத்துகளை விளக்கும் கலைப்படைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இந்த பள்ளியின் மாற்றத்திற்கு காரணம், ஆசிரியர் போராட்டே சார் என்பவரின் அர்ப்பணிப்பு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், மாணவர்களுக்கு பாடங்களை மனப்பாடம் செய்யாமல், வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் கற்பிக்கிறார். அவரது புதுமையான கற்பித்தல் முறை, மாணவர்களை பொறுப்புள்ள, நல்ல பண்புள்ள குடிமக்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது சித்தேஷின் காணொளி மூலமாக தெரியவந்துள்ளது. சித்தேஷின் இந்த பயணம், கிராமப்புறங்களில் அமைதியாக உழைக்கும் ஆசிரியர்களையும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. இந்த காணொளி, சமூக ஊடகங்களின் தாக்கத்துடன் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை காட்டியுள்ளது.
