இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் சென்னையில் உள்ள உள்ளூர் உணவகத்தில் முதல் முறையாக ‘நண்டு ஆம்லெட்’ உண்ணும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். காணொளியில், அவர் தென்னிந்திய பாரம்பரிய முறையில் வாழையிலையில் உணவு உண்ணும் வழக்கத்தைக் கற்றுக்கொள்கிறார். உணவக ஊழியர்கள் அவருக்கு வாழையிலையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, அதில் உணவு பரிமாறுவதற்கு தயார் செய்யும் முறையை எளிமையாக விளக்குகின்றனர். இதனை ஆர்வத்துடன் கற்று, ஒவ்வொரு உணவையும் மகிழ்ச்சியுடன் ருசித்து உண்கிறார். இவரது இயல்பான அணுகுமுறை இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து, பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
காணொளியில், உணவக ஊழியர் ஒருவர் அவருக்கு அந்த உணவகத்தின் சிறப்பு உணவான ‘நண்டு ஆம்லெட்’ சாப்பிட பரிந்துரைக்கிறார். ஆம்லெட் பரிமாறப்படும்போது, அதனுடன் ஒரு சுவையான கறியையும் கொண்டு வருகிறார்கள். வீடியோ பதிவர் ஆம்லெட்டையும் கறியையும் ஒன்றாகச் சாப்பிட்டு, அதன் அற்புதமான சுவையைப் புகழ்கிறார். இறுதியில், உணவக ஊழியர்களுக்கு உள்ளூர் மொழியில் ‘நன்றி’ சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்தக் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
