தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளும் தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
இந்த அதிரடி மாற்றங்கள் குறித்துப் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தவறான முடிவுகளால்தான் அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்தது என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கப் பெரிய சூழ்ச்சி நடந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவும், தவெக மீதுள்ள நம்பிக்கையாலும் தாமாகவே முன்வந்து இணைகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இன்னும் ஒரு மாதத்திற்குள் 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தவெகவை நோக்கி வந்துவிடுவார்கள் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
