இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (BCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான், பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின்படி நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, தங்கள் நாட்டு ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் பிடிவாதம் பிடித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வங்கதேசத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில்,(21-06-2026) நடைபெற்ற ஐ.சி.சி. இயக்குநர்கள் கூட்டத்தில் வங்கதேசத்தின் கோரிக்கை அதிரடியாக நிராகரிக்கப்பட்டது.
பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில் இந்தியாவில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. மேலும், கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையை மாற்றுவது சாத்தியமற்றது என்றும், எவ்வித ஆதாரமுமற்ற புகார்களுக்காக விதிகளை தளர்த்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் ஐ.சி.சி. சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியா வர மறுக்கும் பட்சத்தில் வங்கதேச அணி நீக்கப்பட்டு, தரவரிசையில் முன்னிலையில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. ஜனவரி 21-ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்க கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவுள்ள இந்தத் தொடரில், வங்கதேசத்தின் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
