இன்ஸ்டாகிராம் காணொளியில் மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி, சாதத்தை வடித்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்று கூறியுள்ளார். அவர் விளக்கும்போது, குக்கரில் சாதம் வேகவைக்கும்போது அதில் உள்ள ஸ்டார்ச்சும் இனிப்பு சத்தும் சாதத்தில் தங்கிவிடுவதால், சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார். ஆனால், சாதத்தை வடித்து சாப்பிட்டால், வடிகட்டிய தண்ணீருடன் ஸ்டார்ச்சும் இனிப்பு சத்தும் வெளியேறி, சாதத்தின் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைகிறது. இதனால், சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதாக அவர் அறிவுறுத்துகிறார். மேலும், மூன்று மாதங்கள் தொடர்ந்து வடித்த சாதத்தை சாப்பிட்டால், சர்க்கரை அளவு குறைவதுடன், சாப்பிடும் மாத்திரைகளின் அளவும் குறையும் என்று அவர் கூறுகிறார்.
அதோடு, சாதம் வடித்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்தால், அதில் உள்ள வைட்டமின்கள் கிடைத்து அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்றும் மருத்துவர் குறிப்பிடுகிறார். மேலும், இந்த வடித்த தண்ணீரில் கடலை மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவினால், முகம் பளபளப்பாக இருக்கும் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார். இந்த காணொளி சமூக வலைதளத்தில் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
