மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

பல நகரங்களில் பொதுமக்கள் சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், விநியோகம் இல்லாததால் ஹோட்டல்கள் மூடப்படுவதையும் காண முடிகிறது.

இந்த இக்கட்டான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு கப்பலான ‘வி.எல்.ஜி.சி. ஷிவாலிக்’ பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வரும் இந்த கப்பல், இந்திய கடற்படையின் பாதுகாப்போடு தற்போது இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் கொடி ஏந்திய கப்பலுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்துள்ளது இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த எரிவாயு விநியோகம் இந்தியாவிலுள்ள தட்டுப்பாட்டைப் போக்க உதவும் என்றாலும், போர் நீடித்தால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.