அரசுப் பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாமா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வேறு டிவிஷன் பெஞ்சுகள் (இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு) முன்னதாக முரணான தீர்ப்புகளை வழங்கியிருந்தன. ஒரு அமர்வு “ஓய்வூதியம் வழங்கலாம்” என்றும், மற்றொரு அமர்வு “சட்டப்படி வழங்கத் தேவையில்லை” என்றும் கூறியிருந்தது. இதனால், தனி நீதிபதிகள் இது போன்ற வழக்குகளை விசாரிப்பதில் குழப்பம் நீடித்தது.

இந்த சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காண நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், டி.பரதசக்கரவர்த்தி, சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு முன் அரசு தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் நீண்ட வாதங்களை முன்வைத்தனர்.

விசாரணையின் போது, முறையான மருத்துவக் காரணங்களுக்காகவோ அல்லது அரசு நிர்ணயித்த குறிப்பிட்ட பணிக்காலத்தை நிறைவு செய்து (VRS போன்ற முறையான வெளியேற்றம்) விலகும் ஊழியர்களுக்கோ ஓய்வூதியம் வழங்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், எவ்வித மருத்துவ ஆய்வுக்கும் உட்படாமல், சொந்த விருப்பத்தின் பேரில் பாதியிலேயே ராஜினாமா செய்பவர்களுக்கும் இந்தப் பலன்கள் நீட்டிக்கப்படுமா என்பதே பிரதான கேள்வியாக எழுந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது, அரசுப் பணி விதிகள் மற்றும் சட்டங்களின்படி, ஒருவர் பணியை ராஜினாமா செய்தாலே அவர் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களைப் பெறும் தகுதியை இழக்கிறார். முன்னதாக ஓய்வூதியம் வழங்கலாம் என்று ஒரு டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பு சட்டப்படி சரியானது அல்ல. எனவே, ராஜினாமா செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது.”

இந்தத் தீர்ப்பின் மூலம், அரசுப் பணியை பாதியிலேயே துறப்பவர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான சட்டச் சிக்கலில் ஒரு தெளிவான முடிவு எட்டப்பட்டுள்ளது.