வடகொரியாவின் எல்லையைப் பலப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அதிகாரிகளுக்கு அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். நாட்டின் தெற்கு எல்லையைப் பாதுகாக்கும் முதன்மைப் படைப்பிரிவுகளின் தளபதிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்திய அவர், எல்லையை எவராலும் ஊடுருவவோ அல்லது தகர்க்கவோ முடியாத ஒரு பலத்த கோட்டையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சமீபத்தில் வடகொரியா தனது அரசியலமைப்பில் நாட்டின் எல்லைப் பகுதிகள் தொடர்பான புதிய பிரிவுகளை இணைத்துள்ள நிலையில், எல்லையின் பாதுகாப்பை மேலும் அரண் போல மாற்றுவதற்கு அதிபர் கிம் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனுடன், நவீனப் போர்ச் சூழலுக்கு ஏற்ப நாட்டின் ராணுவப் பயிற்சிகளில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ட்ரோன் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பங்களை ராணுவப் பயிற்சிகளில் பெருமளவில் சேர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மாறிவரும் உலகளாவிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வடகொரிய ராணுவம் தன்னை முழுமையாகத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
