டிஜிட்டல் யுகத்தில் கற்பனைக்கும் எட்டாத விஷயங்கள் இப்போது நிஜமாகி வருகின்றன. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு அரங்கில் மனிதர்களுக்குப் பதிலாக இரண்டு ரோபோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வினோத மல்யுத்தப் போட்டி தற்போது இணையத்தை அதிர வைத்து வருகிறது.

ஒரு பக்கம் ‘EngineAI’ ரோபோ, மறுபக்கம் ‘Unitree’ நிறுவனத்தின் ரோபோ என இரண்டு அதிநவீன இயந்திரங்கள், ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரரைப் போலவே ஒருவரை ஒருவர் தாக்கிப் போட்டியிட்டன. எதிராளியின் அடியை லாவகமாகத் தவிர்ப்பது, குறி வைத்துப் பஞ்ச் செய்வது என மனிதர்களைப் போலவே இவை செயல்படுவதைக் கண்டு தொழில்நுட்ப வல்லுநர்களே வியந்து போயுள்ளனர்.

இந்த மோதலைக் கவனிக்க ஒரு மனித நடுவர் இருந்தாலும், சுற்றி இருந்த மற்ற ரோபோக்கள் வேடிக்கை பார்த்தது கூடுதல் சுவாரசியம். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ரியல் ஸ்டீல்” (Real Steel) சினிமா பாணியில் இது இருப்பதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வருங்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் ரோபோக்களின் மல்யுத்தம் இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், மனித விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.