நேபாளத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பாலே ஷா, பதவியேற்ற வெறும் 45 நாட்களிலேயே இந்தியாவுக்கு எதிராகப் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியைச் சந்திக்க அவர் மறுப்பு தெரிவித்ததால் மிஸ்ரியின் நேபாள பயணம் ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா மற்றும் நேபாள எல்லையில் வாழும் மக்கள் 100 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கிச் சென்றால் கட்டாயம் சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்தி பாலே ஷா அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இது மட்டுமின்றி, இந்திய எல்லையைத் தாண்டி நேபாளம் வருபவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் மற்றும் கடும் சோதனைக்கு உட்பட வேண்டும் என எல்லைக் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சர்ச்சைக்குரிய லிபுலேக் மற்றும் காலாபானி விவகாரங்களை மீண்டும் கையில் எடுத்துள்ள பாலே ஷா, தனது பழைய இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பிரதமரான பிறகும் தொடர்வது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.