வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா, உத்தரகாண்டில் நடந்த இனவெறி தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதான ஏஞ்சல் சக்மா, உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் எம்.பி.ஏ. பயின்று வந்தார். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி, அவர் தனது சகோதரர் மைக்கேல் உடன் டேராடூனில் உள்ள ஒரு சந்தைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், அவர்களை இன ரீதியாக இழிவுபடுத்தி, “சீனாக்காரன்”, “மோமோஸ் விற்பவன்” போன்ற சொற்களை பயன்படுத்தி அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஏஞ்சல் சக்மா எதிர்ப்பு தெரிவித்த போது, ஆத்திரமடைந்த அந்த கும்பல் கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளை கொண்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ஏஞ்சல் சக்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 15 நாட்களுக்கும் மேலாக உயிருக்கு போராடி வந்த நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவரது சகோதரர் மைக்கேல், “வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மற்ற மாநிலங்களில் உரிய பாதுகாப்பும், குறைந்தபட்ச மரியாதையும் இல்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், தொடக்கத்தில் காவல்துறை இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த இனவெறி கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வை சாதாரணமாக்கி வருகிறது” என்று சாடியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இதுகுறித்து கூறுகையில், “இது ஒரு தேசிய அவமானம். நம் நாட்டு மண்ணிலேயே ஒரு இந்தியரை அந்நியர் போல உணரச் செய்வது நாகரிக சமூகத்திற்கு அழகல்ல” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

இந்த கொடூரமான இனவெறி கொலையை கண்டித்து, திரிபுராவில் மாணவர் அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.