அபிஷேக் ஷர்மாவின் இந்த மோசமான ஃபார்ம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலாவது ரன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ‘டக் அவுட்’ ஆகி வெளியேறினார். தனது ராசியை மாற்றிக்கொள்ள முகமது சிராஜின் ஜெர்ஸியை அணிந்து வந்து அவர் செய்த முயற்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், என்னதான் ராசியை மாற்ற முயன்றாலும், மைதானத்தில் ஆரியன் தத் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி, ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பியது ரசிகர்களை வேதனையடைய செய்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த பேட்டராகத் தொடருக்குள் நுழைந்த அபிஷேக், கடந்த 7 இன்னிங்ஸ்களில் 5 முறை டக் அவுட் ஆகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலண்டர் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். பிப்ரவரி மாதத்திலேயே இந்த நிலைமை என்றால், மீதமுள்ள வருடம் அவருக்கு எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பலமான அணிகளுடன் மோதவிருக்கும் நிலையில், அபிஷேக் மீண்டும் தனது அதிரடி ஃபார்முக்குத் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
