மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது கடுமையான உடல் சோர்வின் காரணமாக தூங்கிய தனது தாயை, ஒரு சிறுவன் மிகவும் பாசத்தோடும் அக்கறையோடும் பார்த்துக் கொண்ட நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாடு ஒன்றில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அந்த தாய், அன்றைய நாள் வேலை காரணமாகவோ அல்லது பயணக் களைப்பாலோ ரயிலில் அமர்ந்தபடியே தூங்கி வழிந்துள்ளார். அவர் தூக்க கலக்கத்தில் ரயிலில் உள்ள இரும்புக் கம்பியில் தலையை இடித்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

​இதைப்பார்த்த அந்த சிறுவன், தனது தாய் கம்பியில் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவும் மிகவும் விழிப்புடன் செயல்பட்டுள்ளார். தனது பிஞ்சு கையை அந்த இரும்புக் கம்பியின் மீது வைத்து, தாய் சாய்ந்தாலும் தன் கையின் மீது சாயுமாறு அரணாக நின்று பாதுகாத்துள்ளார். தாயின் மீது அந்த சிறுவன் காட்டிய இந்த தூய்மையான மற்றும் உன்னதமான பாசம் குறித்த வீடியோ தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி, லட்சக்கணக்கான நெட்டிசன்களின் கண்களை குளமாக்கி, லைக்குகளை குவித்து வருகிறது.