நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் கட்டாய மதமாற்றப் புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மும்பையில் முன்னாள் பெண் ஊழியர்களுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக அர்ஷத் சித்திக் (25) என்ற இளைஞர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெலிகாலராகப் பணியாற்றிய போது, அங்குள்ள வாட்ஸ்அப் குரூப் மூலம் பெண் ஊழியர்களின் எண்களைத் திருடி, அவர்களுக்கு ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி வந்துள்ளார்.

​பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் அளித்த புகாரின்படி, அர்ஷத் சித்திக் அந்தப் பெண்ணிடம், “எனக்கு இந்து பெண்களைத் தான் பிடிக்கும்; என்னைத் திருமணம் செய்துகொண்டால் உன்னை மதம் மாறச் சொல்லமாட்டேன், கையில் கயிறு கட்டவோ அல்லது கோவிலுக்குச் செல்லவோ தடை விதிக்க மாட்டேன்” என ஆசை வார்த்தைகளைக் கூறி வலை வீசியது அம்பலமாகியுள்ளது.

சமாஜ்வாடி கட்சி பிரமுகரின் உறவினரான இவர், வேலையை விட்டு நின்ற பிறகும் தொடர்ந்து நான்கு இந்துப் பெண்களுக்கு இது போன்ற ஆபாசத் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளார். சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் போலிஸார் இவரைப் பிணையில் வர முடியாதபடி கைது செய்துள்ளனர்.